நாடோடி இலக்கியன் “திண்ணை” என்கிற தலைப்பில் பதிவு போட்டு கொசுவத்தி சுத்த கூப்பிட்டு இருக்கார். திண்ணைக்கும் எனக்குமான உறவு அந்த வயதில் எனக்குப் புரியாமல் தான் இருந்திருக்கிறது. “திண்ணைக்கும் எனக்குமான உறவு சொல்லிக்கொள்ளும் படி இல்லை” என்று தான் முதலில் இந்தப் பதிவை ஆரம்பித்தேன். ஒரு முறை எழுதிய பிறகு என் பதிவுகளை மாற்றும் பழக்கமில்லை எனக்கு. முதல் முறை மீண்டும் இந்தப் பத்திக்கு வந்து என் கருத்தை மாற்றி எழுதுகிறேன்.
பெற்றோர் இருவரும் வேலைக்குப் போய் விடும் நிலையில் பள்ளி முடித்து 3.45 மணிக்கு வந்ததும் எனக்காக என் புத்தகமூட்டையைச் சுமந்தது என் வீட்டுத் திண்ணை தான். எனக்கு நினைவு தெரிந்து எனது பன்னிரெண்டாவது வயதில் தான் எனக்கு என் வீட்டின் சாவி கிடைத்தது. அந்த வயது வரை என் வீட்டுத் திண்ணையோடு எனக்கே தெரியாமல் ஒரு வித குடித்தனம் நடத்தி வந்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.
அம்மா வீடு திரும்பும் முன் அப்பா அடித்த சில நேரங்கள் அந்தத் திண்ணையின் மெளனம் எனக்களித்த அரவணைப்பு எனக்கு ஏனோ அந்த நாட்களில் விளங்கவில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் படித்து தான் ஆகவேண்டும் என்கிற கட்டாயங்களுக்கு என்னை ஆட்படுத்திய போது கூட அதே திண்ணையில் தான் ப(ந)டித்திருக்கிறேன். வெறும் மூன்றில் இருந்து நான்கு அடி தான் இருந்திருக்கும் அந்தத் திண்ணை, ஆனால் என் பொம்மை மகிழுந்துகள் வேகத்தடைகள் ஏதுமின்று பயணித்த நெடுஞ்சாலை அது. தட்டுத்தடுமாறி அந்தத் திண்ணையில் ஏறப்பழகி கொண்ட நாட்கள் என் நினைவில் இருந்து அழிந்தே விட்டன. ஒருவேளை அம்மாவை கேட்டால் அழகாகச் சொல்வாள். அவளுக்கு மட்டும் எப்படித்தான் என் ஒவ்வொரு அசைவும் நிமிடம்வாரியாக நினைவிருக்குமோ? சொல்லத்தயாராய் இருப்பாள்! ஆனால் நான் ஏன் கேட்பதில்லை? இனி அவளிடம் அவள் வாயாகவே எனக்கு நினைவில் இருக்கும் பல நிகழ்வுகளைக் கேட்க முடிவு செய்துவிட்டேன். நான் ஒழுங்காக இறங்கத்தெரியாமல் தவறி விழுந்த பொழுது திண்ணை என்னை தள்ளிவிட்டது என்கிற பொய்யான காரணம் சொல்லி அதைக் குற்றவாளியாக்கி அடிக்கவும் செய்திருக்கிறேன்.
திண்ணை எனக்கு பிடித்துப்போன காலமும் உண்டு. சிறு வயதில் இருந்தே வளர்ப்பு பிராணிகள் மீது அப்படி ஒரு காதல் எனக்கு. (இன்னும் அந்தப் பழக்கம் இருக்கிறது. தற்போது செல்ல ஆமை (எடிசன்) ஒன்றை வளர்த்து வருகிறேன். அடுத்து “கடல் குதிரை” வளக்க ஆசை. யாருக்காவது கிடைக்குமிடம் தெரியுமா?) வீட்டருகே நாய் போட்ட 4 குட்டிகளை தூக்கி வந்து அந்தத் திண்ணைக்கடியில் தான் போட்டேன். கண் திறக்காத குட்டிகள் பால் குடிக்க முலை தேடி ஆடிய கண்ணாமூச்சியை கண் கொட்டாமல் பார்த்திருக்கிறேன். அந்தக் குட்டிகள் நடக்க ஆரம்பிக்க ஆன அந்த இரண்டு மாத காலம் திண்ணை தான் எனக்கு எல்லாமுமாய் இருந்தது. தீபாவளி இரவுகளில் நான் அதில் கொளுத்திய பாம்பு மாத்திரைகள் விட்டுச்சென்ற கருப்புத் தழும்புகளை நான் தந்த செயற்கை மச்சங்களாய் தாங்கிக்கொண்டு எப்போதும் என்னை பார்த்து சிரி்த்த ஒரு நல்ல நண்பன் அந்தத் திண்ணை. பால் சோறுண்ட பிராயத்தில் உணவு மேடை, புத்தகம் படித்த பருவத்தில் நடிக்க ஒரு அரங்கம்… இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம் என் திண்ணையைப் பற்றி.
இப்படி எனக்கே தெரியாமல் நான் ஆழ்மனதில் காதலித்த அந்தத் திண்ணையை விட்டு வந்தது இப்போது ஏனோ நெஞ்சை பிசைவது போலத்தான் உணர்கிறேன். வீடு மாறி வரும் போது திண்ணையிடம் சொல்லிவிட்டு வந்திருக்க வேண்டுமோ நான்? இப்போது போனால் அந்த வீட்டில் என்னை திண்ணையை பார்க்க அனுமதிப்பார்களா? “காலம் நல்ல மருந்து” என சொல்லக் கேள்வி. ஆனால் சில தருணங்களில் அது கொஞ்சம் வளைந்து கொடுத்து பின்னோக்கி அதில் பயணிக்க முடிந்தால் அதை ‘அமுதம்’ எனலாம். சரி, நான் விளையாட ஒரு திண்ணை இருந்தது என்கிற திருப்தி மட்டுமே போதுமானது. வருங்காலத்தில் திண்ணை என்பது பிள்ளைகள் கற்பனை செய்து பார்க்கும் ஒன்று தானா?
நான் கூப்பிடும் இரண்டு பேர்:
1. அருணா.
2. Sri. (என்னையே கூப்பிடுக்கலப்பா. நிறைய பேர் “இவன் என்ன அந்நியன் மாதிரி பேர் மாத்தி பின்னூட்டம் போட்டுகிறானா?”ன்னு சந்தேகத்துல கேக்குறீங்க. இவங்க வேற ஸ்ரீ. )
எழுதப் பணித்த நாடோடி இலக்கியனுக்கு நன்றி.
நியாபகங்கள் தாலாட்டும்…
-ஸ்ரீ.
Few related Posts
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
