வழக்கமான எனது பதிவு என நினைத்து படிக்க வந்த நண்பரா நீங்க? இந்த வாரம் பதிவு கீழ இருக்கு. அதை படிச்சிட்டீங்கனா அப்போ அடுத்த புதன் கிழமை பார்க்கலாம் சகா போய்டு வாங்க
.
இது வழக்கமா நான் எழுதும் கொலைவெறிப்பதிவு இல்லை. இது அதுக்கு மேல பல மடங்கு கோவத்துல எழுதுற பதுவு. வலைப்பதிவு முழுசா தசாவதாரம் தான். நான் வலை தொடங்கி ஒரு வருஷம் ஆச்சு ஆனா இன்னைக்கு வரை யாரையும் தாக்கியோ, அடுத்தவர் பதிவுகளை குறை கூறியோ ஒரு வரி கூட எழுதியது இல்லை. முதல் முறை இந்த மாதிரி பதிவு எழுதுறேன். விமர்சனம் என்றால் என்ன? இருக்குற நிறை குறை இரண்டையும் எழுதுறது தான? அதென்ன தசாவதாரத்தில் ஒரு நிறை கூடவா சில பதிவர்களுக்கு கிடைக்கலை? நான் பிறப்பில் இருந்தே கமல் வெறியன்.
எல்லா படங்களையும் முதல் நாளே பார்த்திடுவேன். அதனால் இங்கு நான் விமர்சனம் எழுத வரலை. அப்படி நான் எழுதினால் அது எப்படிப்பட்ட பதிவாய் வரும் என்பது எனக்கே தெரியும். அதனால் நான் படத்தில் பார்த்த சில விஷயங்களை பற்றி மட்டும் பதிவு போடுறேன்.
எனக்கு தெரிந்த விஷ்ணு அவதாரங்கள் கதையில் வரும் கதாப்பாத்திரங்களோடு ஒரு ஒப்பனை. அவதாரங்கள் வரிசையில்:
1. நம்பி - மச்ச அவதாரம்.
“திருமாலின் முதல் அவதாரம்”. அவர் கடலுக்குள் தூக்கி வீசப்படுகிறார். இதுக்கு மேல சொல்ல தேவை இல்லை.
2. புஷ் - கூர்ம அவதாரம்.
ஆமை உருவில் விஷ்ணு வர பார்கடலை கடைந்தார்கள். அதனால் தேவர்களுக்கும் அசுரருக்கும் பின்னாடி சண்டை வந்தது. அப்போ புஷ் பண்ற சில விஷயங்கள் இந்த அவதாரத்தோடு ஒத்து போதா?
3. கிருஷ்ணவேனி - வராக அவதாரம்.
வராக அவதாரம் தெரிஞ்சது தான். உலகை காக்க வந்தாரு உலகை மறைச்சாரு அப்டினு கதை சொல்லுவாங்க. அதே தான் இந்த பாத்திரமும் செய்தது அந்த வைரஸ் பெட்டியை மறைப்பதாக சொல்லி பெருமாள் சிலையில் போட்டது.
4. சிங்கன் நரஹாஷீ - நரசிம்ம அவதாரம்.
சிங்கன் நரஹாஷீ பேருலயே நரசிம்ம அவதாரம் என தெரியுது. நரசிம்மர் ஆயுத ஏதும் இல்லாமல் கைகளால் வதம் செய்தார் அதான் இந்த கதாப்பாத்திரமும் செய்தது. மார்ஷியல் கலை வள்ளுனராக காட்டியதன் பொருள் அதான்.
5. கலிபுல்லா கான் - வாமன அவதாரம்.
வாமன அவதாரம் வானளந்த கதை தெரியும். அதான் இந்த கதாப்பாத்திரம் உயரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
6. கிரிஸ்டியன் ஃபிளட்சர் - பரசுராம அவதாரம்.
பரசுராம் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு கோடாலியைப் பெற்றார். ஃபிளட்சரும் அப்படி ஒரு சின்ன ஆயுதம் கொண்டு தான் கொல்கிறார்.
7. அவதார் சிங் - ராம் அவதாரம்.
மனைவி தான் எனக்கு முக்கியம் என சொல்லும் இந்த அவதாரம் ராமாவதாரம் தான்.
8. பல்ராம் நாயுடு - பல்ராம் அவதாரம்.
எனக்கு எதுவும் சிறப்பா விளங்கலை இந்த பெயரை தவிர. தெரிந்தவர்கள் சொல்லலாம்.
9. வின்சண்ட் பூவராகவன் - கிருஷ்ணா அவதாரம்.
இருவரும் கருப்பு நிறம். தேவை இல்லாத கற்பழிப்பு என கருதப்பட்ட அசின் காட்சி. அந்த காட்சி திரெளபதையை துரியோதணன் மான பங்கப்படுத்தும் போது கண்ணன் வந்தது போல இந்த பாத்திரம் அறிமுகம் ஆக்கப்படுகின்றது. இவர் காலில் இரும்பு கம்பி குத்தி இறப்பது போல காட்டப்படுகிறார். கிருஷ்ணன் இறப்பும் அப்படி நடந்த ஒன்று தான். காலில் அம்பு காயத்தில் தான் கண்ணன் இறக்கிறார்.
10. கோவிந்த் ராமசாமி - கல்கி அவதாரம்.
கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு வாதம். இதுக்கு மேல் இந்த கதாப்பாத்திரத்தின் விளக்கம் தேவை இல்லை.
விமர்சித்த யாராவது இதை கவனித்து விமர்சித்தீர்களா? அப்படி செய்திருப்பவர்களுக்கு மட்டும், “மன்னிக்கவும் உங்க வலைப்பூவை படிக்க தவறி விட்டேன் சகா”.
இதற்கு மேல் அழகாக பாத்திரங்களை படைத்திருக்க முடியாது. என்ன? புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஒரு விஷயம் புரியலைன்னா நம்ம ஆளுங்கள் என்ன பண்ணுவாங்கன்னு கொஞ்சம் நாளுக்கு முன்னாடி விமர்சனம் அப்படின்னு பேர்ல எழுதின பதிவுகள் பதில் சொல்லும்.
கவனித்தீர்களா?
1. நம்பி, அவன் மனைவி, அவன் மாமனார் மூவரும் மீண்டும் பிறப்பதாக காட்டப்படுகின்றது. நம்பி கல்லடி பட்டு நெற்றியில் காயம் படுகிறது. அதே போல் கோவிந்துக்கும் துப்பாக்கிச்சுடும் போது நெற்றியில் அடி. அசின் முட்டிக்கொண்டு உயிர் இழந்த கல்லில் மறு ஜென்மத்தில் கால் மோதிக்கொள்கிறார். இந்த மூன்று பாத்திரங்கள் படைப்பு உற்று பாருங்கள். “ஓம் நமச்சிவாய” என சொல்லமாட்டேன் செத்தாலும் சாவேன் கடவுள் தான் முக்கியம் என்ற நம்பி மறுபிறப்பில் கடவுளை விட மனிதம் தான் முக்கியம் என்கிறார். அசினின் பாத்திரம் முற்பிறவில் “உயிர் தான் முக்கியம்” என்பது போல பேசும். அதே போல் தான் அசினின் தந்தை பாத்திரமும் ஆனால் கடைசி காட்சியில் “பாட்டி அவன் என்ன சாதியோ நமக்கேன் இங்க வாங்க” என்பது போல பேசும். எத்தனை பேர் கவனித்தீர்?
2. புஷ் மாளிகையில் அந்த கருடன் சிறப்பாய் காட்டப்பட்டது ?
3. நல்ல வசனங்கள்.
“என்ன நடந்தாலும் life must go on. Hiroshima ல பொறந்த பொண்ணு நான் சொல்றேன் கேளு…”
“”"Fletcher : You cant get ‘away’ with this.
Govindaraj : No, I can get ‘a way’ with this.”"”"
******
அலுவலகத்தில் ப்ளாக் தடை செய்யப்பட்டு விட்டது இந்த நிலையில் இப்போது வரும் விமர்சனங்களை (?) படிக்க முடியாத நிலை. ஆனால் நான் படித்த வரை பார்த்த சில குற்றச்சாட்டுகள்:
1. கமலுக்கு ஏன் 10 வேஷம் இதுல? நடிக்க வேற ஆளே இல்லையா?
வாஸ்தவமான கேள்வி தான். சரி ஆசைப்பட்டுட்டாரு விடுங்க. அவரால் நடிக்க முடியுது நடிக்கிறார். நமக்கு என்ன பிரச்சனை?
2. மூன்று பாத்திரங்களை தவிர மத்த எல்லாமே தேவை இல்லாதவை. நம்பிக்கும் கோவிந்துக்கும் என்ன சம்பந்தம். அந்த முதல் காட்சிக்கும் படத்துக்குமே சம்பந்தம் இல்லையே?
அப்படி நீங்க சொன்னா. படம் ஒரு எழவும் புரியலை உங்களுக்கு. அதான் அழகா சொன்னாங்க படத்துல (Butterfly Effect - இதை அலசி நம்ம சகா மை ஃப்ரெண்ட் போட்ட பதிவு இங்கே) அதை பற்றி பத்தி பத்தியா பதிவு போடுறாங்க நம்ம சகாக்கள். எல்லா கதாப்பாத்திரங்களும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் பட்டு தான் படம் முழுதும் வந்தன. கதைக்கு எல்லா பாத்திரமும் தேவை. ஆனாம் கமல் செய்திருக்க வேண்டாம் என்று சொன்னால் ஒப்புக்கொள்ளலாம். எல்லா பாத்திரமும் கதை வளர தேவையாகவே இருந்தது. அவதார் சிங், கிருஷ்ணவேனி, கலிபுல்லா கான், புஷ், பூவராவன், சிங்கன் நரஹாஷீ இந்த எல்லா பாத்திரமும் கதையை வளர்த்து விட்டவை. எல்லாமே தேவையானவை தான். படத்தை ஃப்ரேம் பை ஃப்ரேம் விமர்சிக்க வேண்டும் அதன் தேவைகளை சொல்ல வேண்டுமானால்.
3. பூவராகவன் எனும் பெயரை தலித்துக்கு வைத்து விட்டார்கள்?
அடடா என்ன அழகா யோசிக்கிறாங்கயா! ஒன்னு மட்டும் கேக்குறேன் உங்க கண்ணுக்கு நல்லதே தெரியாதா? அப்போ நீங்க சொல்ற மாதிரி பாத்தா “வராக அவதாரம்” இழிவா? போங்கப்பா போங்க. இதே படத்துல பாட்டி “போடா சாதிப் பிசாசே! இவன் எம்மகன் தாண்டா உள்ளுக்குள்ள சேப்புடா வெயிலால வெளியில கருத்துப்போய்டான்னு” அழும். பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க அந்த காட்சியை உங்க திரையரங்குகளில் மட்டும் வெட்டி இருப்பார்கள்.
4. இது உலகத்தரமா?
இல்லை தான். என்ன பண்ண? உலக சினிமா பாக்குற நீங்க தான் சொல்லணும் எது உலகத்தரம்னு. எனக்கும் தெரியாது.
5. தேவை இல்லாமல் அடுத்தவன் காசில் குளிர்காய்கிறார் கமல்ஹாசன்.
என்னப்பா செய்ய? கமல்ஹாசனை கமல் மாதிரி இல்லாமல் வேறு மாதிரி காட்ட தான் மேக்கப் தேவை படுது. ஆனா…… (நீங்க ஏதாவது புரிஞ்சிக்கிட்டா நான் பொறுப்பு இல்லை)
6. பொம்மை மாதிரி இருக்கு நிறைய வேஷம்.
உண்மை தான். முகத்தில் முகமூடி போட்டதால் சதைகளை ஆட்டி நடிக்க முடியாத காரணத்தால் இந்த குறை குறையாகவே இருக்கிறது.
7. பாட்டி ஏன் இப்படி சின்ன குழந்தை மாதிரி ஊடுறாங்க?
நியாயமான கேள்வி தான். என் கிட்டயும் பதில் இல்லை.
‘அன்பே சிவம்’ அப்டினு ஒரு நல்ல படம் எடுத்தார் எத்தனை பேரு பாராட்டி பதிவு எழுதினீங்க? குறை சொல்ல கூட்டமா கிளம்பிடுறாங்க. அப்படி பதிவு எழுதுற நண்பர்கள் படத்தை முழுதாக புரிந்து கொண்டார்களா? அதுவும் இல்லை. இவ்வளவு அழகாக என்னைப்பொருத்த வரை திரைக்கதை அமைப்பது கடினம் தான். கமல்ஹாசன் என்றில்லை யார் செய்திருந்தாலும் பாராட்டி இருப்பேன்.
“அவங்களுக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கிப்போகலாமே அதென்ன தாந்தோணித்தனம்?”, அப்படின்னு என் நண்பர் ஒரு கேள்வி கேட்டாரு நிறைய பதிவுகளை படிச்சிட்டு. முதல்ல மத்தவன் உழைப்பையும் கவனியுங்கள் சகாக்களே! கவனித்தீர்களா? மருத்துவமனை காட்சியில் கோவிந்தும், கலிபுல்லா கானும் ஒன்றாய் நடந்து வரும் காட்சியில் அவர்கள் நிழல்கள் கூட ஒத்துப்போகும். கலைஞர்கள் அவ்வளவு நுணுக்கமாக பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார்கள் படத்தை.
நீ என்ன தான் சொல்லு நாங்க அப்படித்தான்னு சொல்றீங்கன்னா
“ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்.
ஞானக்கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம் தான்”
பலர் கேட்ட கேள்விகளுக்கு படத்திலேயே விடை இருக்கு. படத்தை குறை சொல்ல வேண்டும் என்ன கண்ணோட்டத்தில் இல்லாமல் பாருங்கள் உங்களுக்கே புரியும்.
டிஸ்கி: சினிமா பற்றி எழுதாதனால் எழுதிய இந்த பதிவை நீங்க நான் பப்ளிசிட்டிக்காக எழுதினது என எடுத்துக்கொண்டாலும் சரி, என்னோட அதிகப்பிரசங்கி தனமாக எடுத்துக்கொண்டாலும் சரி. சிலர் எழுதும் குறை பதிவுகளுக்கு இது கொஞ்சம் விளக்கம் கொடுக்குமேயானால் நல்லது. வேறு படத்துக்கு இந்த நிலை இருந்திருந்தால் இதே போல் விமர்சனம் நிச்சயம் எழுதி இருப்பேன்.
மேலே சொன்ன அனைத்தும் வலையின் உதவி கொண்டு நான் சேகரித்த தகவல்களில் கோர்வையே. அதில் சில தகவல்களில் தவறு இருந்தால் தெரியப்படுத்தவும்.
Few related Posts
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
